Thursday, March 2, 2017

மெருகூட்டப்பட்ட வடிவில் 'பாட்ஷா' ரிலீஸ்: திரையரங்க உரிமையாளர்கள் முன்னுரிமை மார்ச் 3-ம் தேதி வெளியாகவுள்ள படங்களில் 'பாட்ஷா' படத்தின் மெருகூட்டப்பட்ட வடிவத்துக்கு திரையரங்கு உரிமையாளர்கள் முன்னுரிமை அளித்து வருகிறார்கள். ரஜினி படங்களின் வரிசையில், அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து மாபெரும் வரவேற்பு பெற்ற படம் 'பாட்ஷா'. சுரேஷ்கிருஷ்ணா இயக்கியிருந்த படத்தில் ரஜினி, நக்மா, ரகுவரன், விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தேவா இசையமைத்து இருந்தார். 1995-ம் ஆண்டு இப்படம் வெளியானது. தற்போது 'பாட்ஷா' படத்தை மெருகூட்டி 5.1 ஒலி வடிவத்தில் மார்ச் 3-ம் தேதி வெளியாகவுள்ளது. 'பாட்ஷா' படத்தைத் தயாரித்த சத்யா மூவிஸ் நிறுவனம், தங்களுடைய நிறுவனம் தொடங்கி 50 ஆண்டுகள் ஆவதால் மீண்டும் இப்படத்தை வெளியிடவுள்ளது. இப்படத்தில் ரஜினி உள்ளிட்ட நடிகர்கள் பேசிய டப்பிங்கை படக்குழு எதுவுமே செய்யவில்லை. பின்னணி இசையை மட்டும் தற்போதுள்ள கருவிகளை வைத்து புதிதாக உருவாக்கி சேர்த்துள்ளார் இசையமைப்பாளர் தேவா. 'குற்றம் 23', 'முப்பரிமாணம்', 'யாக்கை' உள்ளிட்ட படங்கள் வெளியானாலும் திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் 'பாட்ஷா'வுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளார்கள். சென்னை சத்யம் திரையரங்கில் 4 காட்சிகள் ஒதுக்கியுள்ளார்கள். இதே போன்று பல்வேறு முன்னணி திரையரங்கிகளிலும் ஒதுக்கியுள்ளதால் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது.
திரை விமர்சனம்: எமன் அமைதியான தோற்றமும், தருணம் உருவாகும்போது வெடித்தெழும் வீரமும் கொண்ட பாத்திரங்களில் நடித்துவரும் விஜய் ஆண்டனி நடித் திருக்கும் அரசியல் த்ரில்லர் படம் ‘எமன்’. ‘சைத்தான்’படத்தின் சறுக்கலை அடுத்து இந்தப் படத்தை விஜய் ஆண்டனி வெகுவாக நம்பியிருந்திருப்பார். ‘நான்’ படத்தின் மூலம் அவரது திரையுலகப் பிரவேசத்தை அழுத்தமாகத் தொடங்கி வைத்த இயக்குநர் ஜீவா சங்கர் இதை இயக்கியிருக்கிறார். இவற்றால் எழும் எதிர்பார்ப்புகளுக்கு என்ன பதில் வைத்திருக்கிறது படம்? 1980-களில் திருநெல்வேலி கிராமம் ஒன்றில் தொடங்குகிறது கதை. சாதிக் கலப்புத் திருமணம் தொடர்பான விரோதம், உட்கட்சி அரசியல் மோதல் ஆகியவற்றால் கொல்லப்படுகிறார் தமிழரசனின் (விஜய் ஆண்டனி) தந்தை அறிவுடை நம்பி (அவரும் விஜய் ஆண் டனிதான்). மன அழுத்தம் தாங்காமல் தாயும் தற்கொலை செய்துகொள்ள, பிறந்த சில நாட்களிலேயே அநாதையாகி றான் தமிழரசன். சங்கிலி முருகனால் வளர்க்கப்படும் தமிழரசன் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் குற்றம், அரசியல் ஆகிய வற்றுக்குள் நுழைகிறான். வாய்ப்ப்பு களைத் திறமையாகப் பயன்படுத்தி, கபட வேடதாரிகளின் சூழ்ச்சிகளை அவர்கள் பாணியிலேயே முறியடித்து வெல்கிறான். கருப்புக்கும் வெள்ளைக்கும் இடையே பல சாயைகள். நாயகனின் கதாபாத்திரம் இந்த இடைவெளிக்குள் இருக்கிறது. தவறு செய்ய வேண்டும் என்னும் எண்ணம் எதுவும் இல்லாதவன். ஆனால், தேவைப்பட்டால் எந்தத் தவறை யும் செய்துவிடுவான். நல்லவர்களிடம் அன்பும் அனுசரணையும் கொண்டிருப் பவன். எதிரிகளின் ஆயுதங்களையே பயன்படுத்தி அவர்களை வெல்பவன். இத்தகைய மனிதனை மையப் பாத்திரமாக்கியிருப்பது படத்தின் வலுவான அம்சங்களில் ஒன்று. நாயகனின் எதிரிகளும் ஒன்றுக்கு மேற்பட்ட முகங்கள் கொண்டவர்கள். நட்பு, விசுவாசம் ஆகியவற்றை விடவும் வெற்றியையே முக்கியமாக நினைக்கும் அரசியல்வாதிகள். இத்தகைய மனிதர் களிடையே நடக்கும் மோதலின் களம்தான் ‘எமன்’. இந்த மோதல்களைச் சுவையான திருப்பங்கள் நிறைந்த திரைக் கதையாக்கித் தந்திருப்பதில் இயக்குநர் வெற்றிபெறுகிறார். ஆனால், நாயகனின் பாத்திரத்தை வலுவாக நிலை நிறுத்து வதில் இயக்குநர் தவறியிருக்கிறார். நாயகன் எதிர்கொள்வதெல்லாம் ஆபத்தான இரட்டை வேடதாரிகளை. எந்த வித முன் தயாரிப்போ, வியூகமோ இல்லாமல் ‘என்னதான் நடக்கும் நடக் கட்டுமே’ என்று அவர்களை எதிர் கொள்கிறான். எதிராளி மிரட்டினால், அதைவிடக் கடுமையாக மிரட்டி வாயடைக்க வைக்கிறான். நாயகன் அசாத்தியமான மனஉறுதியும் எதையும் எதிர்கொள்ளும் திறனும் பெற்றதன் பின்னணி ஒரு காட்சியில்கூடச் சொல்லப் படவில்லை. காட்சிக்குக் காட்சி அதிரடி யும் அதிநாயகத்தன்மையும் நெளிய வைக்கின்றன. நாயகனின் அடுத்தடுத்த வெற்றிகள் திகட்டுகின்றன. எனவே, அதிநாயக சாகசங்களைக் கொட்டாவி யுடன் பார்க்க வேண்டியிருக்கிறது. உயிரைப் பணயம் வைத்து மோதும் போர்க்களம் தொய்வுடன் நகரும் காட்சிகளால் ‘போர்’ களமாகிவிடுகிறது. தர்க்க எல்லைகளைத் தாண்டிய மசாலா படங்களில் இருக்கும் விறு விறுப்பும் வேகமும் இல்லாதது படத்தின் பெரிய பலவீனம். காட்சிகளின் நீளம், வசனங்களின் நீளம் ஆகியவை இதற்குக் காரணம். எனினும் ‘அரசியல்ல எதிரி எதிர்ல நிக்க மாட்டான், விசுவாசமா கூடவே நிப்பான்’ போன்ற சில வசனங்கள் மனதில் நிற்கின்றன. படத்தின் வேகத்தைக் குறைப்பதில் பாடல் காட்சிகளும் பங்கு வகிக்கின்றன. மியா ஜார்ஜின் பாத்திரமும் அது திரைக்கதைக்குப் பயன்படும் வித மும் சமையலில் கொத்துமல்லி, கறிவேப்பிலையின் பயன்பாட்டுக்கு இணையானவை. விஜய் ஆண்டனியின் வழக்கப்படி அடக்கிவாசிக்கும் பாத்திரம். அவரது உடல்மொழியிலும் முக பாவனை களிலும் சிறிது முன்னேற்றம் தெரிகிறது. ஆனாலும் குத்துப் பாடலில்கூட வெளுத்து வாங்காமல் அமரிக்கையாகவே ஆடு வது ஏன் என்று தெரியவில்லை. முக்கியமான பாத்திரத்தில் நடித்திருக்கும் தியாகராஜன் அடக்கமான நடிப்பைத் தந்திருக்கிறார். நாயகி மியா ஜார்ஜுக்குக் குறைந்த வாய்ப்புதான். ஆனாலும் அதில் அவர் குறை வைக்கவில்லை. சார்லி நிறைவாகச் செய்திருக்கிறார். பின்னணி இசை பரவாயில்லை என்றாலும், பாடல்களில் விஜய் ஆண்டனியின் முத்திரை இல்லை. ‘என் மேலே கைவச்சா காலி’ என்னும் குத்துப் பாட்டும் ‘கடவுள் எழுதும் கவிதை’ டூயட் பாட்டும் கேட்கும்படி இருக்கின்றன. கிளைமாக்ஸ் காட்சிகளில் ஒளிப்பதிவில் மிரள வைக்கிறார் (ஒளிப்பதிவாளர்) ஜீவா சங்கர். சமகால அரசியலைவிட மிகையாகப் படத்தில் எதுவும் நடந்துவிடவில்லை என்றாலும் காட்சிக்குக் காட்சி வரும் சூழ்ச்சி களைப்படைய வைக்கிறது. தொடக்கத்தில் இருந்தே ஒவ்வொரு பாத் திரமும் யார் முதுகிலாவது குத்திக் கொண்டே இருக்கிறது. ஓரளவு மனசாட்சி கொண்டவராக வரும் சார்லிகூட இரட்டை வேடம் போடுகிறார். ‘மாற்றத்தை உங்களிடமிருந்து தொடங் குங்கள்’ எனும் காந்தியின் வார்த்தை களைப் பேசும் நாயகன், அவரது அஹிம்சைக் கொள்கையைக் கண்டு கொள்ளவே இல்லை. சற்றே அழுத்தமான காட்சிகளும் கடைசி பத்து நிமிடங்களில் ஏற்படும் நம்பகமான திருப்பங்களும் இல்லா விட்டால் படம் ஒரு பெரும் விபத்தாகியிருக்கக்கூடும்

Tuesday, November 1, 2011

விமர்சனம்

வாகை சூடவா



நடிப்பு: விமல், இனியா, பாக்யராஜ், பொன்வண்ணன், தம்பி ராமய்யா.
இயக்கம்: ஏ.சற்குணம்
தயாரிப்பு: வில்லேஜ் தியேட்டர்ஸ்
இசை: டி.ஜிப்ரான்
ஒளிப்பதிவு: ஓம் பிரகாஷ்

செங்கல் சூளையில் வேகும் குழந்தைகளின் வாழ்வில், கல்வியை விதைக்கும் ஆசிரியனின் கதை. அரசாங்க வேலை பார்க்காததால் சொந்தங்களால் புறக்கணிக்கப்பட்ட பாக்யராஜுக்கு, மகன் விமலை அரசாங்க வாத்தியாராக்கி விட வேண்டும் என்பது கனவு. கிராம சேவா அமைப்பு மூலம், செங்கல் சூளைகளில் வேலை செய்யும் மக்கள் வசிக்கும் கிராமத்துக்கு வேலைக்கு அனுப்புகிறார் விமலை. வாத்தியாரை கேலிப் பொருளாக பார்க்கும் குழந்தைகள், விவரம்கெட்ட ஆளாக பார்க்கும் மக்கள், ஏமாளியாக பார்க்கும் டீக் கடைக்காரி, வில்லனாக பார்க்கும் முதலாளி... இத்தனை பேரையும் சமாளித்து விமல், வாகை சூடினாரா என்பது கதை.

பச்சை என்பதே கண்ணில் படாத வெட்டவெளி பாலைவன கிராமம். நீண்டு கிடக்கும் செங்கல் சூளைகள். பிஞ்சு விரல்கள் முதல் முதிர்த்த கைகள் வரை மண்ணோடு கொண்டிருக்கும் உறவு. ஒரே ஒரு டீக்கடை. மண்ணையும், செங்கலையும் மருந்தாக, விளையாட்டு பொருளாக, தெய்வமாக பார்க்கும் மக்கள் என வலி நிறைந்த வாழ்க்கையை காட்டியிருக்கிறார் இயக்குனர் சற்குணம்.

பென்சில் கொண்டு வரைந்த மாதிரியான மீசை, ஜெமினி கணேசன் ஹேர் ஸ்டைல், தொள தெளா உடை என 60களின் இளைஞனை கண்முன் நடமாட விட்டிருக்கிறார் விமல். இனியா விரும்பும் பாட்டை கேட்க, ரேடியோவை கொடுத்துவிட்டு ‘அவசரப்பட்டு விட்டோடமோ’ என்று நினைப்பதும், வேண்டாமென்று மறுத்த சாப்பாட்டை திருட்டுத்தனமாக சாப்பிடுவதும், தம்பி ராமய்யா போடும் கணக்குக்கு அப்பாவிடம் பதில் கேட்டு சொல்வதும், தெனாவெட்டு போஸ்ட்உமனிடம் கிண்டலடிப்பதுமாக, விமல் வித்தியாசம் காட்டி நிற்கிறார். ‘என் வாத்தியார் வேலைக்கு வேற ஆள் கிடைப்பாங்க. ஆனா உழைப்பு, சோறுன்னு இருந்தவங்க மனசுல கல்வியை விதைச்சுட்டேம்பா. என்னை விட்டா அவங்களுக்கு யாருப்பா இருக்காங்க’ என்று பாக்யராஜிடம் கலங்கி நிற்கும்போது, நம்மையும் கலங்க வைக்கிறார்.

நடிப்பில் ஆச்சர்யப்படுத்துகிறார் இனியா. விமல் மனதில் காதல் இருக்கிறதா என்பதை அறிய தனக்கு கல்யாணம் நடக்கப்போவதாக பொய் சொல்வதும் அதைக் கேட்டு விமல் வருந்தும்போது சந்தோஷ ஆட்டம் போடுவதும், ‘நீ கல்யாணமாயி போயிட்டா, எனக்கு யார் சமைச்சுப் போடுவா?’ என்று விமல் கேட்க, ஏமாற்றம், விரக்தி, வேதனையால் கண்ணீர் ததும்ப வீடு திரும்பும் காட்சி அபாரம்.

சதா கணக்கு போட்டு டார்ச்சர் பண்ணும், ‘டூ போர் எட்டு’ தம்பி ராமய்யா, செங்கல் மண்ணை கண்டுபிடித்து, காடு அழிந்ததை தாங்காமல் மனநோயாளியாகி, ‘விதைக்கல அறுக்கற...’, ‘நான் போறேன் நீ இரு’ என்று விமலை அறிவுறுத்தும் குமரவேல், புழுதிக்காட்டிலேயே கண்டுடெடுக்கப்பட்டிருக்கிற நீலகண்டன் உள்ளிட்ட சிறுவர்கள், முதலாளி பொன்வண்ணன் தங்களை ஏமாற்றுவதை உணர்ந்து, மகளை விமலிடம் ஒப்படைத்து, ‘யய்யா இவளுக்கு எதையாவது சொல்லிக் கொடுய்யா’ என்று கலங்கும் பெண் என ஒவ்வொரு பாத்திரப்படைப்பும் அற்புதம். அந்த காலகட்டத்தை திரையில் கொண்டு வர நிறையவே மெனக்கெட்டிருக்கிறார்கள். ஜிப்ரானின் இசையும், ஓம்பிரகாஷின் ஓளிப்பதிவும் படத்துக்கு பலம்.

எந்த திருப்பமும் இன்றி முதல்பாதி முழுக்க காட்சிகளின் அடர்த்தியால் படம் நகர்வது நெளிய வைக்கிறது. படித்த வாத்தியார் என்பதை தவிர இனியாவுக்கு விமல் மீது காதல் பிறக்க வேறு காரணம் இல்லை என்பதால் காதலில் அழுத்தம் குறைவு. கிளைமாக்சில் பாக்யராஜின் என்ட்ரியில் தொடங்கி அடுத்தடுத்து நடக்கும் விஷயங்களில் நாடக வாசனை. விமல் எடுக்கப் போகும் முடிவை முன்பே யூகிக்க முடிவதால் ஆச்சர்யத்தையோ, நெகிழ்ச்சியையோ ஏற்படுத்தவில்லை.

7ஆம் அறிவு விமர்சனம்

7ஆம் அறிவு





போதி தர்மன் என்னும் பல்லவ இளவரசன், புத்த மதத் தொண்டாற்ற சீனா செல்கிறார். அங்கு, மக்களுக்கு ஏற்படும் கொடிய நோயை குணப்படுத்துகிறார். தற்காப்புக் கலையை கற்றுக்கொடுத்து, மக்களை பாதுகாக்கிறார். அங்குள்ள மக்களால் புத்தருக்கு இணையாகப் போற்றப்படுகிறார். வரலாற்றின் பக்கங்களில் காணப்படாத இந்த நிகழ்வுடன், இன்றைய தலைமுறையினரின் ஆராய்ச்சி, தியாகம் மற்றும் வருங்கால விஞ்ஞான வளர்ச்சியையும் சொல்கிறது படம்.

சயின்டிஸ்ட் மாணவியான ஸ்ருதி, போதி தர்மன் மரபணு பற்றி ஆராய்கிறார். சர்க்கஸ் கலைஞன் அரவிந்திடம் (சூர்யா) போதி தர்மன் மரபணு இருப்பதைக் கண்டுபிடிக்கிறார். அவருக்குத் தெரியாமலேயே அதை ஆராய்ந்து வருகிறார். இந்நிலையில், இந்தியா மீது சீனா, பயோவார் தொடுக்கிறது. கொடிய நோய்க்கிருமியைப் பரப்ப, வில்லன் ஜானியை இந்தியாவுக்கு அனுப்புகிறது. அவன் இங்கு நோயைப் பரப்ப, அது வேகமாகப் பரவுகிறது. நோயை குணப்படுத்தும் மருந்து என்ன என்பது, போதி தர்மன் சீனாவுக்கு கற்றுக்கொடுத்தது. போதி தர்மன் குறித்த மரபணு சோதனை நடத்தும் ஸ்ருதி அதில் வென்றால் மீண்டும் போதி தர்மன் குணங்கள் அரவிந்துக்கு வந்து விடும். அப்படி வந்தால், நோய்க்கான மருத்தைக் கண்டுபிடிக்க முடியும். ஜானியின் இன்னொரு அசைன்மென்ட், ஸ்ருதியை போட்டுத்தள்ளுவது. ஜானி திட்டம் நிறைவேறியதா? ஸ்ருதி ஆராய்ச்சி வென்றதா? சூர்யா, போதி தர்மனாக மாறினாரா என்பது கதை.

முதல் 20 நிமிடப் படம், ஹாலிவுட் பிரமாண்டத்தின் பிரதிபலிப்பு. பனி படர்ந்த மலைகள், நிறம், உயரம் அனைத்திலும் மாறுபட்ட மக்கள், இவற்றுக்கு நடுவில் தமிழன் ஒருவன், 1600 வருடங்களுக்கு முன் கால்பதித்ததை காட்சியாகப் பார்க்கும்போது மெய்சிலிர்க்கிறது. காந்த விழிகள், கருணைப் பார்வை, நொடியில் எதையும் செய்து முடிக்கும் வேகம் என, சூர்யாவின் ஒவ்வொரு அசைவும் ஆச்சரியம். கதை இந்த நூற்றாண்டுக்குள் வரும்போது, அச்சு அசலான முருகதாஸ் படமாகிறது. சர்க்கஸ் கலைஞனான அரவிந்த், சர்க்கஸை பிரபலப்படுத்த ஆட்டம் போடுவதில் இருந்து, ஸ்ருதியின் ஆராய்ச்சிக்கான நட்பை காதலாக எடுத்துக்கொண்டு தவிப்பது வரை அருமை. சிக்ஸ்பேக் உடம்பு, நரம்பு முறுக்கேறும் சண்டை, சர்க்கஸ் சாகசம் என சூர்யாவின் உழைப்பு அளவிட முடியாத உயரத்தில் நிற்கிறது.

ஸ்ருதி, கடமையும், காதலும் மிக்க ஆராய்ச்சியாளராக வருகிறார். ஆராய்ச்சிக்காக, சூர்யாவிடம் விருப்பம் இல்லாமல் பழகுவதும், அவர் தன் காதலைச் சொல்லும்போது, ‘உன்னை மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் ஒரு பொண்ணு கையை தொட்டாலே காதல் வந்துருது’ என்று சூர்யா மீது எரிந்து விழுவதும், சூர்யாவை போதி தர்மனாக்கி நாட்டைக் காப்பாற்ற துடிப்பதுமாக, நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். ஹாலிவுட் வில்லன் ஜானி ட்ரை நுயென், ஆக்ஷனில் பின்னி எடுப்பார் என்றால், நோக்கு வர்மத்தால் மற்றவர்களை மயக்கி, அவர்களை வைத்தே சண்டை போட்டு விட்டு, இவர் தலையை மட்டும் திருப்பித் திருப்பி பார்ப்பது ஏமாற்றம். எல்லாவற்றுக்கும் சேர்த்து கிளைமாக்சில் சூர்யாவோடு மோதி, சண்டை தாகத்தை தீர்த்து வைக்கிறார்.

ஹாரிஸின் இசையில், பாடல்கள் வெரைட்டி. சீனாவில் நடக்கும் காட்சிகளில், அந்நாட்டின் இசைப் பின்னணி கதைக்கும், காட்சிக்கும் வலு சேர்க்கிறது. ரவி கே.சந்திரனின் ஒளிப்பதிவை ஹாலிவுட் தரம் என்று சொல்லிவிட முடியாது. அதையும் தாண்டிய உழைப்பை அளித்துள்ளார். பீட்டர் ஹெய்னின் ஆக்ஷனும், ராஜீவனின் அரங்கங்களும் கதையுடன் நம்மை கைப்பிடித்து கூட்டிச் செல்கிறது. படத்தில் குறைகள் இருந்தாலும், ஒரு பெரும் தமிழ் வரலாற்றை சிறு எபிசோடுக்குள், பிரமாண்டமாகச் சொல்ல வேண்டும் என்ற நோக்கத்துக்காகவே பாராட்டலாம் இயக்குனரை. நல்ல படம் தர வேண்டும் என்பதற்காக அபார முயற்சியொன்றில் இறங்கிய ஏ ஆர் முருகதாஸுக்கு பாராட்டுகள்!