Tuesday, November 1, 2011

விமர்சனம்

வாகை சூடவா



நடிப்பு: விமல், இனியா, பாக்யராஜ், பொன்வண்ணன், தம்பி ராமய்யா.
இயக்கம்: ஏ.சற்குணம்
தயாரிப்பு: வில்லேஜ் தியேட்டர்ஸ்
இசை: டி.ஜிப்ரான்
ஒளிப்பதிவு: ஓம் பிரகாஷ்

செங்கல் சூளையில் வேகும் குழந்தைகளின் வாழ்வில், கல்வியை விதைக்கும் ஆசிரியனின் கதை. அரசாங்க வேலை பார்க்காததால் சொந்தங்களால் புறக்கணிக்கப்பட்ட பாக்யராஜுக்கு, மகன் விமலை அரசாங்க வாத்தியாராக்கி விட வேண்டும் என்பது கனவு. கிராம சேவா அமைப்பு மூலம், செங்கல் சூளைகளில் வேலை செய்யும் மக்கள் வசிக்கும் கிராமத்துக்கு வேலைக்கு அனுப்புகிறார் விமலை. வாத்தியாரை கேலிப் பொருளாக பார்க்கும் குழந்தைகள், விவரம்கெட்ட ஆளாக பார்க்கும் மக்கள், ஏமாளியாக பார்க்கும் டீக் கடைக்காரி, வில்லனாக பார்க்கும் முதலாளி... இத்தனை பேரையும் சமாளித்து விமல், வாகை சூடினாரா என்பது கதை.

பச்சை என்பதே கண்ணில் படாத வெட்டவெளி பாலைவன கிராமம். நீண்டு கிடக்கும் செங்கல் சூளைகள். பிஞ்சு விரல்கள் முதல் முதிர்த்த கைகள் வரை மண்ணோடு கொண்டிருக்கும் உறவு. ஒரே ஒரு டீக்கடை. மண்ணையும், செங்கலையும் மருந்தாக, விளையாட்டு பொருளாக, தெய்வமாக பார்க்கும் மக்கள் என வலி நிறைந்த வாழ்க்கையை காட்டியிருக்கிறார் இயக்குனர் சற்குணம்.

பென்சில் கொண்டு வரைந்த மாதிரியான மீசை, ஜெமினி கணேசன் ஹேர் ஸ்டைல், தொள தெளா உடை என 60களின் இளைஞனை கண்முன் நடமாட விட்டிருக்கிறார் விமல். இனியா விரும்பும் பாட்டை கேட்க, ரேடியோவை கொடுத்துவிட்டு ‘அவசரப்பட்டு விட்டோடமோ’ என்று நினைப்பதும், வேண்டாமென்று மறுத்த சாப்பாட்டை திருட்டுத்தனமாக சாப்பிடுவதும், தம்பி ராமய்யா போடும் கணக்குக்கு அப்பாவிடம் பதில் கேட்டு சொல்வதும், தெனாவெட்டு போஸ்ட்உமனிடம் கிண்டலடிப்பதுமாக, விமல் வித்தியாசம் காட்டி நிற்கிறார். ‘என் வாத்தியார் வேலைக்கு வேற ஆள் கிடைப்பாங்க. ஆனா உழைப்பு, சோறுன்னு இருந்தவங்க மனசுல கல்வியை விதைச்சுட்டேம்பா. என்னை விட்டா அவங்களுக்கு யாருப்பா இருக்காங்க’ என்று பாக்யராஜிடம் கலங்கி நிற்கும்போது, நம்மையும் கலங்க வைக்கிறார்.

நடிப்பில் ஆச்சர்யப்படுத்துகிறார் இனியா. விமல் மனதில் காதல் இருக்கிறதா என்பதை அறிய தனக்கு கல்யாணம் நடக்கப்போவதாக பொய் சொல்வதும் அதைக் கேட்டு விமல் வருந்தும்போது சந்தோஷ ஆட்டம் போடுவதும், ‘நீ கல்யாணமாயி போயிட்டா, எனக்கு யார் சமைச்சுப் போடுவா?’ என்று விமல் கேட்க, ஏமாற்றம், விரக்தி, வேதனையால் கண்ணீர் ததும்ப வீடு திரும்பும் காட்சி அபாரம்.

சதா கணக்கு போட்டு டார்ச்சர் பண்ணும், ‘டூ போர் எட்டு’ தம்பி ராமய்யா, செங்கல் மண்ணை கண்டுபிடித்து, காடு அழிந்ததை தாங்காமல் மனநோயாளியாகி, ‘விதைக்கல அறுக்கற...’, ‘நான் போறேன் நீ இரு’ என்று விமலை அறிவுறுத்தும் குமரவேல், புழுதிக்காட்டிலேயே கண்டுடெடுக்கப்பட்டிருக்கிற நீலகண்டன் உள்ளிட்ட சிறுவர்கள், முதலாளி பொன்வண்ணன் தங்களை ஏமாற்றுவதை உணர்ந்து, மகளை விமலிடம் ஒப்படைத்து, ‘யய்யா இவளுக்கு எதையாவது சொல்லிக் கொடுய்யா’ என்று கலங்கும் பெண் என ஒவ்வொரு பாத்திரப்படைப்பும் அற்புதம். அந்த காலகட்டத்தை திரையில் கொண்டு வர நிறையவே மெனக்கெட்டிருக்கிறார்கள். ஜிப்ரானின் இசையும், ஓம்பிரகாஷின் ஓளிப்பதிவும் படத்துக்கு பலம்.

எந்த திருப்பமும் இன்றி முதல்பாதி முழுக்க காட்சிகளின் அடர்த்தியால் படம் நகர்வது நெளிய வைக்கிறது. படித்த வாத்தியார் என்பதை தவிர இனியாவுக்கு விமல் மீது காதல் பிறக்க வேறு காரணம் இல்லை என்பதால் காதலில் அழுத்தம் குறைவு. கிளைமாக்சில் பாக்யராஜின் என்ட்ரியில் தொடங்கி அடுத்தடுத்து நடக்கும் விஷயங்களில் நாடக வாசனை. விமல் எடுக்கப் போகும் முடிவை முன்பே யூகிக்க முடிவதால் ஆச்சர்யத்தையோ, நெகிழ்ச்சியையோ ஏற்படுத்தவில்லை.

7ஆம் அறிவு விமர்சனம்

7ஆம் அறிவு





போதி தர்மன் என்னும் பல்லவ இளவரசன், புத்த மதத் தொண்டாற்ற சீனா செல்கிறார். அங்கு, மக்களுக்கு ஏற்படும் கொடிய நோயை குணப்படுத்துகிறார். தற்காப்புக் கலையை கற்றுக்கொடுத்து, மக்களை பாதுகாக்கிறார். அங்குள்ள மக்களால் புத்தருக்கு இணையாகப் போற்றப்படுகிறார். வரலாற்றின் பக்கங்களில் காணப்படாத இந்த நிகழ்வுடன், இன்றைய தலைமுறையினரின் ஆராய்ச்சி, தியாகம் மற்றும் வருங்கால விஞ்ஞான வளர்ச்சியையும் சொல்கிறது படம்.

சயின்டிஸ்ட் மாணவியான ஸ்ருதி, போதி தர்மன் மரபணு பற்றி ஆராய்கிறார். சர்க்கஸ் கலைஞன் அரவிந்திடம் (சூர்யா) போதி தர்மன் மரபணு இருப்பதைக் கண்டுபிடிக்கிறார். அவருக்குத் தெரியாமலேயே அதை ஆராய்ந்து வருகிறார். இந்நிலையில், இந்தியா மீது சீனா, பயோவார் தொடுக்கிறது. கொடிய நோய்க்கிருமியைப் பரப்ப, வில்லன் ஜானியை இந்தியாவுக்கு அனுப்புகிறது. அவன் இங்கு நோயைப் பரப்ப, அது வேகமாகப் பரவுகிறது. நோயை குணப்படுத்தும் மருந்து என்ன என்பது, போதி தர்மன் சீனாவுக்கு கற்றுக்கொடுத்தது. போதி தர்மன் குறித்த மரபணு சோதனை நடத்தும் ஸ்ருதி அதில் வென்றால் மீண்டும் போதி தர்மன் குணங்கள் அரவிந்துக்கு வந்து விடும். அப்படி வந்தால், நோய்க்கான மருத்தைக் கண்டுபிடிக்க முடியும். ஜானியின் இன்னொரு அசைன்மென்ட், ஸ்ருதியை போட்டுத்தள்ளுவது. ஜானி திட்டம் நிறைவேறியதா? ஸ்ருதி ஆராய்ச்சி வென்றதா? சூர்யா, போதி தர்மனாக மாறினாரா என்பது கதை.

முதல் 20 நிமிடப் படம், ஹாலிவுட் பிரமாண்டத்தின் பிரதிபலிப்பு. பனி படர்ந்த மலைகள், நிறம், உயரம் அனைத்திலும் மாறுபட்ட மக்கள், இவற்றுக்கு நடுவில் தமிழன் ஒருவன், 1600 வருடங்களுக்கு முன் கால்பதித்ததை காட்சியாகப் பார்க்கும்போது மெய்சிலிர்க்கிறது. காந்த விழிகள், கருணைப் பார்வை, நொடியில் எதையும் செய்து முடிக்கும் வேகம் என, சூர்யாவின் ஒவ்வொரு அசைவும் ஆச்சரியம். கதை இந்த நூற்றாண்டுக்குள் வரும்போது, அச்சு அசலான முருகதாஸ் படமாகிறது. சர்க்கஸ் கலைஞனான அரவிந்த், சர்க்கஸை பிரபலப்படுத்த ஆட்டம் போடுவதில் இருந்து, ஸ்ருதியின் ஆராய்ச்சிக்கான நட்பை காதலாக எடுத்துக்கொண்டு தவிப்பது வரை அருமை. சிக்ஸ்பேக் உடம்பு, நரம்பு முறுக்கேறும் சண்டை, சர்க்கஸ் சாகசம் என சூர்யாவின் உழைப்பு அளவிட முடியாத உயரத்தில் நிற்கிறது.

ஸ்ருதி, கடமையும், காதலும் மிக்க ஆராய்ச்சியாளராக வருகிறார். ஆராய்ச்சிக்காக, சூர்யாவிடம் விருப்பம் இல்லாமல் பழகுவதும், அவர் தன் காதலைச் சொல்லும்போது, ‘உன்னை மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் ஒரு பொண்ணு கையை தொட்டாலே காதல் வந்துருது’ என்று சூர்யா மீது எரிந்து விழுவதும், சூர்யாவை போதி தர்மனாக்கி நாட்டைக் காப்பாற்ற துடிப்பதுமாக, நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். ஹாலிவுட் வில்லன் ஜானி ட்ரை நுயென், ஆக்ஷனில் பின்னி எடுப்பார் என்றால், நோக்கு வர்மத்தால் மற்றவர்களை மயக்கி, அவர்களை வைத்தே சண்டை போட்டு விட்டு, இவர் தலையை மட்டும் திருப்பித் திருப்பி பார்ப்பது ஏமாற்றம். எல்லாவற்றுக்கும் சேர்த்து கிளைமாக்சில் சூர்யாவோடு மோதி, சண்டை தாகத்தை தீர்த்து வைக்கிறார்.

ஹாரிஸின் இசையில், பாடல்கள் வெரைட்டி. சீனாவில் நடக்கும் காட்சிகளில், அந்நாட்டின் இசைப் பின்னணி கதைக்கும், காட்சிக்கும் வலு சேர்க்கிறது. ரவி கே.சந்திரனின் ஒளிப்பதிவை ஹாலிவுட் தரம் என்று சொல்லிவிட முடியாது. அதையும் தாண்டிய உழைப்பை அளித்துள்ளார். பீட்டர் ஹெய்னின் ஆக்ஷனும், ராஜீவனின் அரங்கங்களும் கதையுடன் நம்மை கைப்பிடித்து கூட்டிச் செல்கிறது. படத்தில் குறைகள் இருந்தாலும், ஒரு பெரும் தமிழ் வரலாற்றை சிறு எபிசோடுக்குள், பிரமாண்டமாகச் சொல்ல வேண்டும் என்ற நோக்கத்துக்காகவே பாராட்டலாம் இயக்குனரை. நல்ல படம் தர வேண்டும் என்பதற்காக அபார முயற்சியொன்றில் இறங்கிய ஏ ஆர் முருகதாஸுக்கு பாராட்டுகள்!